வீடுகளுக்கு நவீன தோற்றம் தரும் அறை தடுப்புகள்


வீடுகளுக்கு நவீன தோற்றம் தரும் அறை தடுப்புகள்
x
தினத்தந்தி 9 Jun 2018 1:05 PM IST (Updated: 9 Jun 2018 1:05 PM IST)
t-max-icont-min-icon

அறை தடுப்புகள் (Room Dividers) அமைப்பானது மேலை நாடுகளில் இருந்து வந்த உள் அலங்கார முறையாகும். அவற்றில் தற்காலிக அறை தடுப்புகள், நிரந்தர அறை தடுப்புகள் என்று இரு பொதுவான முறைகள் இருக்கின்றன.

 பிளாஸ்டிக் பேனல் வகைகள், மரத்தடுப்புகள் அல்லது பிரி-காஸ்ட் சுவர்களால் அறைகளுக்குள் நிரந்தர தடுப்புகளை அமைக்கலாம்.

தற்காலிக தடுப்புகள்

குறிப்பாக, தற்காலிக தடுப்புகள் மூலம் அறைகளை எளிதாக பிரித்து தக்க இட வசதியின் அடிப்படையில் பயன்படுத்த முடியும். பழைய வழியாக இருந்தாலும், அதன் உபயோகம் காரணமாக தற்போது அவற்றில் உலர் சுவர் போன்ற பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. அதாவது, ‘ஸ்டட் சேனல்கள்’ கொண்ட ‘பிரேம்களை’ சுவரில் பொருத்தி அதன் இரு பக்கங்களிலும் ‘பைபர் சிமெண்டு’ பலகைகளை அமைத்து, மத்தியில் தக்க அளவுகளுக்கேற்ற உலர் சுவர்கள் நிறுத்தப்படுகின்றன.

உலர் சுவர் தொழில்நுட்பம்

வெளிநாடுகளில் மேற்கண்ட முறை அதிகமாக பழக்கத்தில் இருக்கின்றன. நமது பகுதிகளில் கட்டிடத்திற்கான பளு தாங்கும் சுவர் என்ற பாதுகாப்பு அடிப்படையில் சுற்றுச்சுவர்களை மட்டும் பாரம்பரிய செங்கல் மூலம் அமைத்து. வீட்டின் உள்புறம் உலர் சுவர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கலாம் என்றூம் கட்டுமான வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

எளிமையான பட்ஜெட்

துணிகள், மூங்கில், கண்ணாடிகள், மரங்கள் ஆகிய பல வகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட அறை தடுப்புகளை அமைத்து வீடுகளை அழகாகவும், தனிமை கிடைக்கும் வகையிலும் மாற்றம் செய்து கொள்ளலாம். குறிப்பாக, கண்ணாடி மற்றும் துணிகளால் தயாரிக்கப்பட்ட தடுப்புகளை எளிதாக அறைகளில் அமைக்க முடியும். மேலும், மூங்கில், பிளைவுட் அல்லது கார்டுபோர்டு ஷீட்கள் கொண்ட தடுப்புகளும் சற்று எளிமையான பட்ஜெட்டில் கிடைக்கின்றன.

மடக்கு தடுப்புகள்

தற்போதைய நகர நாகரிகத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தனிமையை விரும்புவது வழக்கம். அல்லது ஒரு அறையை இரண்டாக பிரித்து தனிமை கெடாமல் பயன்படுத்தவும் அறை தடுப்புகள் உதவுகின்றன. அது போன்ற சூழலில் மடக்கி வைக்கக்கூடிய அறை தடுப்புகளை (Folding Room Dividers) பயன்படுத்தலாம். அவற்றில் உள்ள சவுகரியம் என்னவென்றால், வேண்டும்போது பயன்படுத்தி விட்டு, மற்ற சமயங்களில் அழகாக மடித்து ஓரமாக வைத்து விடலாம்.

திரை தடுப்புகள்

ஆடைகள் மாற்றிக்கொள்ள உதவும் அறையின் மூலைப்பகுதி அல்லது படுக்கையை தனிமையாக மாற்ற உதவும் தடுப்புகளாக கெட்டியான துணியால் தயாரிக்கப்பட்ட அறை தடுப்புகள் சந்தையில் கிடைப்பதை பயன்படுத்தலாம். அது தவிரவும், வழக்கமான திரைகளைக்கூட குழந்தைகளின் படுக்கை அறைகளுக்கான தடுப்புகளாக சிக்கன பட்ஜெட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பக்கவாட்டு தடுப்புகள்

மேலும், பக்கவாட்டில் தள்ளும்படி (Sliding Divider) அமைக்கப்படும் தடுப்புகள் கண்ணாடி, பிளைவுட் மற்றும் மூங்கில் ஆகிய பொருட்களால் தயார் செய்யப்பட்டும் ஆங்காங்கே கிடைக்கின்றன. அவற்றை இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரித்து, தள்ளும்படி அறைகளுக்கு இடையில் அமைத்துக்கொள்ள இயலும். முந்தைய அமைப்புகளை விடவும் இது சற்று கூடுதலான பட்ஜெட்டில் இருந்தாலும், அழகான தோற்றம் தரக்கூடியது. 
1 More update

Next Story