அஸ்திவாரம்-தளமட்டம் அமைப்பில் பொறியாளர் ஆலோசனைகள்


அஸ்திவாரம்-தளமட்டம் அமைப்பில் பொறியாளர் ஆலோசனைகள்
x
தினத்தந்தி 21 July 2018 10:43 AM IST (Updated: 21 July 2018 10:43 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரை நகரங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் அடித்தளப் பொருளாக ஆற்று மணல் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் அடித்தளப் பொருளாக (Sub Base Material) ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதோடு, தளம் அமைப்பதில், நிரப்பப்படும் பொருளாகவும் மணல் உள்ளது. மேற்கண்ட அமைப்புகளில் மணலை மட்டும் பிரதான கட்டுமான பொருளாக பயன்படுத்துவதில், குறைபாடுகள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளன.

மணலின் தன்மைகள்

அதாவது, தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சிக்கொள்வதன் காரணமாக அதன் இயல்பான கொள்ளளவு அதிகரிப்பது, வெயில் காலங்களில் ஈரப்பதத்தை விரைவாக இழந்து விடுவது, அழுத்தம் தாங்குவதில் குறைந்த திறன் கொண்டிருப்பது, பிணைப்புத் தன்மை போதுமான அளவில் இல்லாமல் தனித்தனியான உதிரிகளாக அமைந்திருப்பது போன்றவை மணலின் குறைபாடுகள் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

செலவுகள் குறையும்

அதனால், அஸ்திவார பணிகள் மற்றும் தளமட்டம் நிரப்பும் பணிகள் ஆகியவற்றை கச்சிதமாக செய்து முடிக்க, பல்வேறு தொழில்நுட்ப அணுகுமுறைகள் அனுபவமிக்க கட்டுமான பொறியாளர்களால் தரப்பட்டுள்ளது. அவற்றை, வீடு கட்டுவோர், ஒப்பந்ததாரர்கள், கட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொண்டு கடைப்பிடிப்பதன் மூலம் உறுதியான, நீடித்துழைக்கும் கட்டிடங்கள் அமைவதோடு, கட்டிட பராமரிப்புச் செலவுகளும் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மணலின் கலவைகள்

பொதுவாக, மணல்-செஞ்சரளை மண் கலவையை 1-க்கு 3 என்ற விகிதத்தில் அடித்தளங்களில் போட்டு நிரப்புவது சரியான முறையாகும். அஸ்திவார பணிகளில் அவ்வாறு பயன்படுத்தினால் கட்டுமானத்திற்கு அழுத்தம் தாங்கும் திறன் கூடுதலாக அமையும். மண் அல்லது குவாரி டஸ்ட்-செஞ்சரளை மண் கலவை அல்லது குவாரி டஸ்ட்-மணல் கலவை ஆகியவற்றையும் அஸ்திவாரத்தின் நிரப்பு பொருளாக அமைக்கலாம். மேற்கண்ட கலவைகளை தளமட்டம் நிரப்பும் பணிகளிலும் பயன்படுத்தலாம். அதுபோன்ற சமயங்களில் போதுமான தண்ணீர் தெளித்து அவற்றை கெட்டிப்படுத்தினால், அந்த கலவை வலுவான தன்மை கொண்டதாக அமைகிறது.

தளமட்ட பணிகள்

கட்டிடங்களின் தளமட்டம் நிரப்பும் பணிகளில் மேற்கண்ட மணல் கலவையை ஒரே தடவையாக போட்டு நிரப்பாமல், 6 அங்குலம் கனம் கொண்ட பல்வேறு அடுக்குகளாக அமைத்து கெட்டிப்படுத்தவேண்டும். இப்போது மணல் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, குவாரி டஸ்ட் அல்லது எம்-சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அதன் மூலம், கீழ்மட்ட அஸ்திவார பணிகள் மற்றும் தளமட்டம் நிரப்பும் பணிகளில் ஆகும் செலவுகளில் 20 முதல் 35 சதவிகிதம் சேமிக்கப்படும் என்றும் கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் செலவு குறைவு என்ற நிலையில் சவுடு என்று சொல்லப்படும் மண் வகையை மட்டும் பயன்படுத்தி தளமட்ட அமைக்கும் முறையை தவிர்க்கும்படியும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். 

Next Story