கட்டிட பணிகளின் மணல் தேவைக்கு உகந்த எம்-சாண்ட்


கட்டிட பணிகளின் மணல் தேவைக்கு உகந்த எம்-சாண்ட்
x
தினத்தந்தி 21 July 2018 11:51 AM IST (Updated: 21 July 2018 11:51 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற வளர்ச்சிகளுக்கேற்ப கட்டுமான அமைப்புகள் பெருகி வரும் நிலையில், இயற்கை மணல் மூலம் மட்டுமே கட்டுமான பணிகளுக்கான மணல் தேவையை ஈடு செய்ய இயலாது.

ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் இயற்கை மணல் கிடைக்கிறது. அதன் காரணமாக, வருங்கால கட்டுமான பணிகளுக்கான மணல் தேவைக்கு மாற்று வழிகளையே நாட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

மணலின் தரம்

ஒரு செ.மீ அளவுகொண்ட இயற்கை மணல் படிமம் உருவாக சுமாராக 100 ஆண்டுகள் ஆகலாம். எல்லா இடத்திலும் ஒரே அளவு மற்றும் தரத்தில் மணல் உருவாவதில்லை. இடத்திற்கேற்ப அதன் தன்மைகள் மாறுபடும் நிலையில், தரமான மணல் என்பது இன்றைய சூழலில் குறைவாகவே கிடைக்கிறது. இந்த நிலையில் ஆற்று மணலுக்கு மாற்றாக சொல்லப்படும் ‘எம்-சாண்ட்’ பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்று கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மணலில் கலந்துள்ள அசுத்தங்கள்

இயற்கை மணல் தட்டுப்பாடு காரணமாக தரம் குறைந்த வண்டல் மற்றும் கரிம அசுத்தங்கள் (Organic Impurities) கலந்துள்ள மணல் சில இடங்களில் பயன்படுத்தப்படுவதை பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்தகைய மணல் பயன்பாடு கட்டமைப்புகளுக்குள் உள்ள கம்பிகளை நாளடைவில் அரிக்கச்செய்து, பாதிப்புகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், நிலக்கரி, மைக்கா உள்ளிட்ட தாதுப்பொருட்கள் போன்ற அசுத்தங்கள் அகற்றப்படாத மணலை பயன்படுத்தி உருவான கான்கிரீட் அமைப்புகள் காலப்போக்கில் வெப்பநிலை விளைவு காரணமாக (Weathering Effect) வலிமை குறைவதும் சோதனைகளில் அறியப்பட்டுள்ளது.

தரமில்லாத மணல்

மேலும், வடிகட்டிய மணல் (Filter Sand) கட்டிடம் அமைப்பதற்கு போதுமான தரமற்றது என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. கட்டிடங்களில் விரிசல்கள் உருவாவதற்கு வடிகட்டிய மணலும் ஒரு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. அதாவது, ஏரிகள், குளம், குட்டைகளில் இவ்வகை மணல் அதிகமாக எடுக்கப்படுவதால், அதில் கலந்திருக்கும் வண்டல், சேறு உள்ளிட்ட கனிமங்கள் போன்றவை கான்கிரீட் அமைப்புகளின் உறுதியை குறைக்கக்கூடிய விதத்தில் அமைந்து விடுகின்றன.

இதர மாநிலங்களில் எம்-சாண்ட்

எம்-சாண்டில் எவ்விதமான கரிம அசுத்தங்களும், வண்டல்களும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும், அதன் துகள்கள் சரியான அளவுகளில் ஒரே சீராக இருப்பதால் வலிமையான கான்கிரீட் அமைப்பை உறுதி செய்கின்றன. கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் எம்-சாண்ட் பயன்பாடு பிரதானமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

மணல் மற்றும் நீரின் தேவை

உதாரணமாக, 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகளுக்கு குறைந்தபட்சம் 1100 மெட்ரிக் டன் (Metric Tones) இயற்கை மணல், சுமார் 6000 கிலோ லிட்டர் நீர் போன்றவை தேவையாக இருக்கும். செயற்கை மணலை பயன்படுத்தும் பொழுது மேற்கண்ட செலவுகள் குறைவதுடன், கட்டுமானத்தின் கால அளவு, தொழிலாளர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைவது அறியப்பட்டுள்ளளது.

அரசு அமைப்பின் சான்று

எம்-சாண்ட் வகைகளின் தரத்தை தேசிய அளவிலான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்கள் தர கண்காணிப்பு கூட்டமைப்பு (National Council For Cement And Building Meterials NCCBM) தக்க சோதனைகளின் அடிப்படையில் தர சான்றிதழ் அளிக்கிறது. அதை தொடர்ந்து Sieve Analysis, Optical Microscopic Study For Particle Shape, Effectiveness, Cube Test For Compressive Strength And Mix Designs ஆகிய சோதனைகளையும் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story