ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-மும்பை ஆட்டம் ‘டிரா’


ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-மும்பை ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 14 Jan 2020 11:24 PM GMT (Updated: 14 Jan 2020 11:24 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-மும்பை அணிகள் மோதிய ஆட்டம் ‘டிரா’ வில் முடிந்தது.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-மும்பை (பி பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து இருந்தது. ஆர்.அஸ்வின் 32 ரன்னுடனும், சாய்கிஷோர் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அணியின் ஸ்கோர் 300 ரன்னாக உயர்ந்த போது சாய் கிஷோர் (42 ரன்கள்) சித்தேஷ் லத்தால் ரன்-அவுட் செய்யப்பட்டார். 8-வது விக்கெட்டுக்கு அஸ்வின்-சாய்கிஷோர் ஜோடி 105 ரன்கள் திரட்டியது. அடுத்து வந்த கே.விக்னேஷ் 3 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய ஆர்.அஸ்வின் 79 ரன்னிலும் ஷம்ஸ் முலானி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

தமிழக அணி முதல் இன்னிங்சில் 156.4 ஓவர்களில் 324 ரன்னில் ‘ஆல்-அவுட்’டாகி ‘பாலோ-ஆன்’ ஆனது. இதனால் 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 22 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது இந்த போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற மும்பை அணி 3 புள்ளிகள் பெற்றது. தமிழக அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி கண்ட 3-வது டிரா இதுவாகும். 2 ஆட்டத்தில் தோற்று இருந்தது.

இதே போல் ராஜ்கோட்டில் நடந்த கர்நாடகா-சவுராஷ்டிரா இடையிலான ஆட்டமும் டிரா ஆனது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற சவுராஷ்டிரா அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது.

புதுச்சேரியில் நடைபெற்ற கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் 266 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 2-வது இன்னிங்சில் 184 ரன்னில் சுருண்டது. இதனால் கோவா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story