பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது, இந்தியா


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது, இந்தியா
x
தினத்தந்தி 4 March 2020 12:36 AM GMT (Updated: 4 March 2020 12:36 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி இரு லீக் ஆட்டங்கள் மழையால் ரத்தானது. அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.

சிட்னி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஏற்கனவே அரைஇறுதி அணிகள் உறுதியாகி விட்ட நிலையில், ‘பி’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சிட்னியில் நடக்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டு போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தாய்லாந்து அணி 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர் போட்டி வரலாற்றில் தாய்லாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தொடக்க வீராங்கனைகள் நாட்டகன் சான்டம் 56 ரன்களும் (50 பந்து, 10 பவுண்டரி), நட்டாயா பூச்சாதம் 44 ரன்களும் விளாசினர்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் 139 ரன்களுக்கு மேல் இலக்கை விரட்டிப் பிடித்ததில்லை. நல்ல ஸ்கோர் எடுத்து விட்டதால் முதல் வெற்றியை பெற்று விடலாம் என்று தாய்லாந்து வீராங்கனைகள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் பாகிஸ்தான் வீராங்கனைகள் பேட்டிங் செய்வதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் வேறு வழியின்றி இந்த ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

‘மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. மழையை நாம் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் நாங்கள் இந்த ஆட்டத்தில் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட்டை நாங்கள் எந்த அளவுக்கு விளையாடுகிறோம் என்பதை காட்டிவிட்டோம். கடினமாக உழைத்து முன்னேற்றம் கண்டு வருகிறோம்’ என்று தாய்லாந்து கேப்டன் சோர்னரின் டிப்போச் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடக்க இருந்தது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் இந்த ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்க அணி முதலிடத்தை (7 புள்ளி) பிடித்தது. இங்கிலாந்து அணி (6 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, இங்கிலாந்துடன் (காலை 9.30 மணி) மோதுகிறது. 2018-ம் ஆண்டு உலக கோப்பையிலும் இவ்விரு அணிகளும் தான் அரைஇறுதியில் சந்தித்தன. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

இதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவிடம் ஒரு போதும் தோற்றதில்லை.

அரைஇறுதி ஆட்டங்களுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) கிடையாது. ஒருவேளை கனமழையால் அரைஇறுதி ஆட்டங்களை கைவிடும் சூழ்நிலை நேர்ந்தால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story