மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி..!! தொடரை கைபற்றிய இந்தியா..!!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
டாக்கா,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி எற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்கா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.ஸ்மிருதி மந்தனா வந்த வேகதிலேயே 1 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்கள் எடுத்தார்.வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் 3 விக்கெட்டுகள் விழ்த்தினார்.
இதனையடுத்து 2-வது இன்னிங்ஸ்சை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷமிமா சுல்தானா நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் அவர் ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார்.இலக்கை நெருங்கிய தருணத்தில் அவர் ரன்அவுட் மூலம் வெளியேறினார்.முடிவில் வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷமிமா சுல்தானா 42 ரன்கள் எடுத்தார். அவரே இந்த போட்டியின் ஆட்டநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய அணி தரப்பில் தேவிகா வைத்யா, மின்னு மணி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.தொடர் நாயகி விருது இந்த தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.