3-வது டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி


3-வது டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
x

image courtesy: Pakistan Cricket twitter

18.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் - சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 32 ரன்களிலும் பாபர் அசாம் 37 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த உஸ்மான் கான் 5 ரன்களில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் 41 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிம் ராபின்சன் மற்றும் டிம் செய்பெர்ட் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 28 ரன்கள் மற்றும் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய டீன் பாக்ஸ்கிராப்ட் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இந்த நிலையில் 18.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. மார்க் 87 ரன்களுடனும் ஜேம்ஸ் நீசம் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.


Next Story