ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: 164 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: 164 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி
x

Image Courtesy : @ProteasMenCSA twitter

ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது.

செஞ்சூரியன்,

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் சரிவில் இருந்து எழுச்சி பெற்ற தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 28 ரன்களும் , குயிண்டன் டி காக் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ரஸ்ஸி வான் டெர் டுசென் நிலைத்து ஆடினார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஹென்ரிச் கிளாசென் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்கள்(13 பவுண்டரி, 13 சிக்ஸர்), டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்கள்(6 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்தனர்.

இதையடுத்து 417 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த மிட்செல் மார்ஷ், 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக 17 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து களத்தில் இறங்கிய அலெக்ஸ் கேரி, நிலைத்து நின்று நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். அதே சமயம் லபுஸ்சேன் 20 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் குறைந்தது.

டிம் டேவிட் 25 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து கேட்ச் ஆகி வெளியேறினார். சதத்தை நெருங்கிய அலெக்ஸ் கேரி 99 ரன்களில் ரபாடாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இறுதியாக 34.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.


Next Story