5-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து? விக்கெட்டுகளை இழந்து திணறல்


5-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து? விக்கெட்டுகளை இழந்து திணறல்
x

image courtesy:PTI

தினத்தந்தி 9 March 2024 6:47 AM GMT (Updated: 9 March 2024 7:02 AM GMT)

இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 259 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் சுழலில் சிக்கியது. அவரது பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராலி ரன் எதுவுமின்றியும், டக்கெட் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய ஒல்லி போப் 19 ரன்களில் அஸ்வினின் பந்துவீச்சில் வீழ்ந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய பேர்ஸ்டோ 39 ரன்கள் அடித்த நிலையில் குல்தீப் ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். அஸ்வின் பந்து வீச்சில் போல்டானார். 3-வது நாளின் உணவு இடைவேளை வரை அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களுடன் தடுமாறி வருகிறது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 156 ரன்கள் தேவைப்படும் நிலையில் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இதனால் இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. குறைந்தது இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்களிடையே காணப்படுகிறது.


Next Story