டெல்லிக்கு எதிராக அதிரடி ஆட்டம் - தோனி பேட்டிங் குறித்து பிளெமிங் கூறியது என்ன..?


டெல்லிக்கு எதிராக அதிரடி ஆட்டம் - தோனி பேட்டிங் குறித்து பிளெமிங் கூறியது என்ன..?
x

Image Courtesy: Twitter

தினத்தந்தி 1 April 2024 7:34 AM GMT (Updated: 1 April 2024 11:38 AM GMT)

ஐ.பி.எல் போன்ற நீண்ட தொடர்களில் ஏற்ற, இறக்கங்கள் இருப்பது சாதாரணம் தான்.

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய தோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். ருதுராஜ் சென்னை அணியின் கேப்டன் பதவியை ஏற்ற பின் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் வென்ற சி.எஸ்.கே அணி, வெளி மாநிலத்தில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், தோனியின் பேட்டிங் எங்களுக்கு ஒரு நேர்மறை உணர்வை கொடுத்துள்ளது என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிளெமிங் கூறியதாவது,

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், தோனியின் பேட்டிங் எங்களுக்கு ஒரு நேர்மறை உணர்வை கொடுத்துள்ளது. அதிலும் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பின் முதல் முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தோல்வியை பொறுத்தவரை களத்தில் சி.எஸ்.கே அணியின் செயல்பாடுகளை வெளிப்படையாக காட்டுகிறது. நாங்கள் கொஞ்சம் மோசமாக விளையாடினோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பவர் பிளேவில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்க முடியவில்லை. அதேபோல் பவுலிங்கிலும் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது, டெல்லி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். சரியாக பேட்ஸ்மேன்களை பிரஷர் செய்து, பிட்சின் உதவியையும் பயன்படுத்தி கொண்டார்கள். அதேபோல், வார்னர் மற்றும் பண்ட் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியால் நல்ல ஸ்கோரையும் எட்ட முடிந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் குறித்து எந்த கவலையும் கொள்ள தேவையில்லை. ஐ.பி.எல் போன்ற நீண்ட தொடர்களில் ஏற்ற, இறக்கங்கள் இருப்பது சாதாரணம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அதனால் கவலை கொள்ளும் அளவிற்கு எந்த தேவையும் இல்லை.

அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கேப்டன்சியும் நன்றாக இருந்தது. கேப்டன்சியில் மாற்றம் வரும் போது, அணியை இயல்பாக கொண்டு செல்வது சாதாரணமில்லை. அதனை ருதுராஜ் சிறப்பாக செய்து வருகிறார். அதேபோல் அனைத்து முடிவுகளிலும் தோனியின் பங்கும் உள்ளது. அவரும் ஜடேஜாவும் களத்தில் ருதுராஜிற்கு உதவியாக இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு முன்பாக விளையாடிய 2 போட்டிகளிலும் சி.எஸ்.கே அணி வென்றது. சொந்த மண்ணில் இருந்து வெளியில் வந்து விளையாடும் போது என்ன மாதிரியான சவால் இருக்கும் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story