ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் ; 2-வது டி20 போட்டி வங்கதேசம் வெற்றி...!!


ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் ; 2-வது டி20 போட்டி வங்கதேசம் வெற்றி...!!
x

image courtesy;twitter/@BCBtigers

தினத்தந்தி 17 July 2023 10:30 AM IST (Updated: 17 July 2023 3:04 PM IST)
t-max-icont-min-icon

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது

சிலேட்,

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.இதன் முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

போட்டி தொடங்கிய சில ஓவர்களிலேயே மழை குறுக்கிட்டது.இதனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது.ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்மதுல்லா 25 ரன்னும், இப்ராகிம் ஜட்ரன் 22 ரன்னும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தாபிசூர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 35 ரன்னும், அபிப் ஹொசைன் 24 ரன்னும் எடுத்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இறுதியில், வங்காளதேச அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.


Next Story