ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 299/ 8


ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 299/ 8
x

ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.

மான்செஸ்டர்,

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கவாஜா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் உஸ்மான் கவாஜா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னர் 32 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய ஸ்டீவின் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அவரைத்தொடர்ந்து மார்னஸ் அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 48 ரன்களும், கேமரூன் கிரீன் 16 ரன்களும், மிட்செல் மார்ஸ் 51 ரன்களும், அலெக்ஸ் காரே 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



இறுதியில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் 23 ரன்களும், பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டுவர்டு பிராட் 2 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story