ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 384/4


ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 384/4
x

Image Courtacy: EnglandCricketTwitter

தினத்தந்தி 20 July 2023 6:30 PM GMT (Updated: 20 July 2023 7:05 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டுவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 36 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சை பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் தொடங்கினர். டக்கெட் (1 ரன்) ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். அடுத்து கிராவ்லியுடன், மொயீன் அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மொயீன் அலி 23 ரன் எடுத்த போது 3 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன் மற்றும் 200-க்கும் மேல் விக்கெட் எடுத்த 16-வது வீரர் என்ற சாதனை பட்டியலில் இணைந்தார். மொயீன் அலி தனது பங்குக்கு 54 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜோ ரூட் வந்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய ஜாக் கிராவ்லி, ஆஸ்திரேலியாவின் ஷாட்பிட்ச் வியூகத்தை தகர்த்து ரன்களாக மாற்றினார். ஜோ ரூட்டும் அடித்து நொறுக்கவே ஸ்கோர் எகிறியது. கிராவ்லி 93 பந்துகளில் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 2-வது பகுதியில் மட்டும் 25 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து மிரள வைத்தனர். ஸ்கோர் 336-ஐ எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. கிராவ்லி 189 ரன்களில் (182 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜோ ரூட் 84 ரன்களில் (95 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார்.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 72 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 384 ரன்கள் குவித்து 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (24 ரன்), ஹாரி புரூக் (14 ரன்) களத்தில் உள்ளனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story