ஆஷஸ் டெஸ்ட்; 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 273-க்கு ஆல்-அவுட்..ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் இலக்கு...!


ஆஷஸ் டெஸ்ட்; 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 273-க்கு ஆல்-அவுட்..ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் இலக்கு...!
x

Image Courtesy: @ICC

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து அதிரடியாக முதலில் மட்டையை சுழற்றிய இங்கிலாந்து அணி ஒரே நாளில் 78 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தில் முதல்முறையாக சதம் அடித்த உஸ்மான் கவாஜா 126 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. அலெக்ஸ் கேரி (66 ரன்) சிறிது நேரத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆண்டர்சனின் 1,100-வது விக்கெட்டாக இது பதிவானது. அடுத்து கேப்டன் கம்மின்ஸ் நுழைந்தார்.

மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் தன்னை திடமாக நிலைநிறுத்தி போராடிய உஸ்மான் கவாஜா 141 ரன்களில் (321 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) ஆலி ராபின்சனின் யார்க்கர் பந்தில் போல்டு ஆனார். 1997-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் என்ற திருப்தியோடு வெளியேறினார்.

அதன் பிறகு வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 14 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலியா மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 116.1 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை கொட்டியதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 273 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ரூட், ஹாரி புரூக் தலா 46 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் , லயன் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.


Next Story