ஆஸ்பத்திரியில் கண் விழித்ததும் அம்மா கூறிய முதல் வார்த்தை அதுதான் - அஸ்வின்


ஆஸ்பத்திரியில் கண் விழித்ததும் அம்மா கூறிய முதல் வார்த்தை அதுதான் - அஸ்வின்
x

image courtesy: AFP

தினத்தந்தி 6 March 2024 3:08 PM GMT (Updated: 6 March 2024 3:24 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் பாதியிலேயே வெளியேறினார்.

சென்னை,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3-வது போட்டியிலிருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது நாள் ஆட்டம் முடிந்ததும் பாதியிலேயே வெளியேறினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை படைத்திருந்த அவர் திடீரென்று தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக பாதியிலேயே வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்தது.

சென்னைக்கு சென்று குடும்பத்தை பார்த்த அஸ்வின் நிலைமை சீரானதும் உடனடியாக அணிக்கு திரும்பி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் 4வது நாளில் விளையாடி வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் தன்னுடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலயே அப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலைமை வந்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் கண்விழித்ததும் இந்திய அணிக்காக விளையாடாமல் என்னை ஏன் பார்க்க வந்தாய்? என்று தம்மிடம் அம்மா கேட்டதாக அஸ்வின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

"அப்போது என்னுடைய அம்மா என்ன சொல்வார் என்பது எனக்கு தெரியும். என்னுடைய மனைவி மற்றும் அப்பா என்ன சொல்வார்கள் என்பதும் தெரியும். மருத்துவமனைக்கு நான் சென்ற பின் சுய நினைவு வந்ததும் என்னுடைய அம்மா என்னிடம் முதலில் "ஏன் நீ வந்தாய்?" என்று சொன்னார். அதன் பின் மீண்டும் சுயநினைவுக்கு வந்ததும் "நீ இங்கிருந்து செல்ல வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது" என்று அம்மா கூறினார்.

அப்படி எங்களுடைய மொத்த குடும்பமும் கிரிக்கெட்டால் வடிவமைக்கப்பட்டு என்னுடைய கெரியருக்கு உதவி செய்து வருகின்றனர். அது எளிதல்ல. அதனால் நிறைய மேடு பள்ளங்கள் மற்றும் உணர்ச்சிகளை எனக்கு நானே கடந்து வருகிறேன். பெரும்பாலான குடும்பங்கள் இதுபோலவே இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் என்னுடைய பெற்றோர்களின் வாழ்க்கை எனது கிரிக்கெட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இப்போதும் என்னுடைய அப்பா நான் முதல் போட்டியில் விளையாடுவது போல் எனது ஆட்டத்தை பார்ப்பார். அப்படி அவர்களுக்கு கிரிக்கெட் என்ன அர்த்தம் என்பதை ஒப்பிடுகையில் எனக்கு நிச்சயமாக குறைவாக இருக்கிறது. மேலும் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் பலமுறை கிரிக்கெட் விளையாடுவதற்காக என்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்த நேரங்கள் கடினமாக இருந்தது' என்று கூறினார்.


Next Story