ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்..!


ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்..!
x

42 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 252 ரன்கள் எடுத்தது

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. எனவே இதில் வெற்றி காணும் அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து மழையால் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக தொடங்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டதால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

தொடக்கத்தில் பக்கர் ஜமான் 4ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாபர் அசாம் 29ரன்களில் வெளியேறினார்.

பின்னர் அப்துல்லா ஷபீக் , முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர் . நிலைத்து ஆடி ரன்கள் குவித்த அப்துல்லா ஷபீக் அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 52 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து முகமது ரிஸ்வான் இப்திகார் அகமது இருவரும் அதிரடி காட்டினர் . முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தார்.

இறுதியில் 42 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 252 ரன்கள் எடுத்தது.முகமது ரிஸ்வான் 86 ரன்களும் , இப்திகார் அகமது 47 ரன்களும் எடுத்தனர் .

இலங்கை அணியில்மதீஷ பத்திரன 3 விக்கெட் , பிரமோத் மதுஷன் 2 விக்கெட் வீழ்த்தினர்.


Next Story