ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி.!


ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி.!
x
தினத்தந்தி 9 Sep 2023 5:38 PM GMT (Updated: 9 Sep 2023 5:56 PM GMT)

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய திமுத் கருணாரத்னே 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் சமாரவிக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். குசல் மெண்டிஸ் 50 ரன்களும் சமாரவிக்ரமா 93 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி சார்பில் தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது நைம் 21 ரன்களும், மெஹதி ஹசன் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து லிட்டன் தாஸ் (15), கேப்டன் ஷகிப் (3), முஷ்பிகுர் ரகிம் (29) பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், சரிவில் இருந்த அணியை மீட்க டோஹிட் ஹிரிடோய் போராடினார். அவர் தன் பங்குக்கு 97 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீக்ஷனா, தசுன் ஷனகா மற்றும் பதிரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதன் மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


Next Story