பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
பெர்த்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 487 ரன்களும், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 271 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 216 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 63.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 90 ரன்களும், மிட்செல் மார்ஷ் 63 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 450 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினர். வெறும் 30.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சில் 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 24 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தெர்ந்தேடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.