ஆஷஸ் தொடரை தக்க வைத்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி...!!


ஆஷஸ் தொடரை தக்க வைத்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்  அணி...!!
x

image courtesy;twitter/@ICC

நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி 1-1 என்ற கணக்கில் தக்கவைத்து உள்ளது.

சவுத்தாம்ப்டன்,

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆண்கள் அணியைப் போலவே பெண்கள் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றின. அடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான 2-வது போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை விழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 91 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி இலக்கை நெருங்கி வந்து தோல்வியை தழுவியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய ஜோனாசென் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 279 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நாட் ஸ்கிவர் பிரண்ட் சதமடித்து அணி வெற்றி பெற போராடினார். அவர் 99 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், அலனா கிங் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்திய அலனா கிங் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தக்கவைத்து உள்ளது. ஆஷஸ் தொடர் யாருக்கு என்பதை தீர்மாணிக்கும் 3-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.


Next Story