வங்காளதேசம்-அயர்லாந்து இடையிலான டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது


வங்காளதேசம்-அயர்லாந்து இடையிலான டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
x

வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்தது.

மிர்புர்,

அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வங்காளதேச அணி வென்றது. இந்த நிலையில் வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 77.2 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 50 ரன்னும், விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 37 ரன்னும், கர்டிஸ் கேம்பர் 34 ரன்னும், மார்ட் அடைர் 32 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டும், எபாதத் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். டெஸ்ட் போட்டியில் தைஜூஸ் இஸ்லாம் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 11-வது முறையாகும்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ரன் எதுவும் எடுக்காமலும், தமிம் இக்பால் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மொமினுல் ஹக் 12 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story