ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி சாதனை வெற்றி
இந்த ஆட்டத்தில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகபட்சமாக மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மிர்புர்,
வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 382 ரன்களும், ஆப்கானிஸ்தான் 146 ரன்னும் எடுத்தன. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 33 ஓவர்களில் 115 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேச அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டியில் ரன் வித்தியாசத்தில் பெற்ற 3-வது பெரிய வெற்றி இதுவாகும். அத்துடன் இந்த வகையில் ஆசிய அணியின் மிகப்பெரிய வெற்றியாகவும் இது பதிவானது.
வங்காளதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகபட்சமாக மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதற்கு முன்பு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு டெஸ்டில் 13 விக்கெட்டுகள் (2022-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. இரண்டு இன்னின்சிலும் சதம் அடித்த 2-வது வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்ற நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 146, 124 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி நடக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிம் இக்பால் தலைமையிலான வங்காளதேச அணியில் கைவிரல் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் ஆடாத நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் இடம் பெற்றுள்ளார். முகமது நைம், அபிப் ஹூசைன், தஸ்கின் அகமது ஆகியோரும் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.