இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது உண்மையிலேயே மிகப்பெரிய சவால் - வில்லியம்சன்


இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது உண்மையிலேயே மிகப்பெரிய சவால் - வில்லியம்சன்
x

image courtesy; ICC

தினத்தந்தி 15 Nov 2023 3:09 AM GMT (Updated: 15 Nov 2023 4:53 AM GMT)

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அணியினர் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது உண்மையிலேயே மிகப்பெரிய சவால் என்பதை அறிவோம். ஆனால் லீக் சுற்று இப்போது முடிந்து விட்டது. தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும்.

எங்களை குறைவாக நீங்கள் மதிப்பிட்டால் அதனால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. இது எங்களுக்கு பழக்கமாகி விட்டது. களத்தில் முழு திறமையை வெளிப்படுத்தும்போது, அது எங்களுக்கு வெற்றிக்குரிய வாய்ப்பை உருவாக்கி தரும். இந்த தொடரில் மற்ற அணிகளை விட இந்திய அணியே இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதே சமயம் நாங்களும் ஓரளவு நன்றாக ஆடியுள்ளோம்.

அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக மைதானம் முழுவதும் ரசிகர்கள் நீலநிற உடையில் காட்சி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில், ஒரு வீரராக இந்த மாதிரி மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் முன் விளையாடுவது ஒரு வகையில் சிறப்பு வாய்ந்ததுதான். எங்கள் நாடு சிறியது. மைதானத்தை ரசிகர் கூட்டத்தால் நிரப்ப முடியாது. எனவே இப்படியொரு சூழலில் உற்சாகமாக அனுபவித்து விளையாட விரும்புகிறேன். இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.


Next Story