பென் டக்கெட் அபார சதம்... முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இங்கிலாந்து


பென் டக்கெட் அபார சதம்... முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இங்கிலாந்து
x

image courtesy; twitter/@ICC

இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 130.5 ஓவர்களில் 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரோகித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள் , ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள் , ஆண்டர்சன் , ஹார்ட்லி , ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் கிராலி 15 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் 500-வது விக்கெட்டாக பதிவானது.

அடுத்து களமிறங்கிய ஒல்லி போப், பென் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் வெறும் 88 பந்துகளிலேயே சதமடித்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப் 39 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் பென் டக்கெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2-வது நாளில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது. பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.



Next Story