'எனது கேரியரில் மிகப்பெரிய வெற்றி' - கோப்பையை வென்ற பின் சென்னை வீரர் நெகிழ்ச்சி...!
ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
அகமதாபாத்,
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் சீசன் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சஹா ஆகியோரின் அபார பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை விரட்டிய சென்னை அணி 3 பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கிய போது சென்னைக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை வீரர்கள் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை வீரர்களால் அந்த அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த வெற்றி எனது கேரியரில் மிகப்பெரிய வெற்றி என சென்னை அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவான் கான்வே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது,
நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, மிகவும் பதட்டமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் இது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஐபிஎல் இறுதிப்போட்டி இதைவிட பெரிதாக எதுவும் இருக்க முடியாது.
சக இடதுகை ஆட்டக்காரர் மைக் ஹஸ்சிக்கு நிறைய வாழ்த்துக்கள். அவரின் கீழ் இருப்பது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.