இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல் - பிசிசிஐ அறிவிப்பு


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல் - பிசிசிஐ அறிவிப்பு
x

Image Courtesy: @Jaspritbumrah93 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கவுகாத்தி,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு முன்னதாக கவுகாத்தியில் அணியில் சேர இருந்த பும்ரா, பந்துவீச்சை வலுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக யாரையும் அணியில் சேர்க்கவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.




Next Story