உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை
x

சென்னை, டெல்லி மற்றும் புனேவில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளன.

சென்னை,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டமும், அக்டோபர் 19-ந்தேதி புனே எம்.சி.ஏ. மைதானத்தில் இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டமும் நடைபெறுகிறது.

இந்த 3 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. இன்று இரவு 8 மணி முதல் டிக்கெட்டுகள் 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்கு மட்டும் நேற்று டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

தொடர்ந்து இந்திய அணி விளையாடும் ஆட்டங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற உள்ளது. அதன்படி தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பை மைதானத்தில் நடக்கும் ஆட்டங்களுக்கு செப்டம்பர் 1-ந்தேதியும், பெங்களுரு மற்றும் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டங்களுக்கு செப்டம்பர் 2-ந்தேதியும், ஆமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ந்தேதியும் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story