தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பதிலாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்


தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பதிலாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: @ChennaiIPL

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் ஐ.பி.எல் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த எம்.எஸ்.தோனி நடப்பு ஐ.பி.எல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்திய இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் தோனி ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட உள்ள தோனி புதிய கேப்டன் ருதுராஜ் வளரும் வரை முக்கிய முடிவுகளை எடுப்பதில் உறுதுணையாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் கேப்டன்ஷிப் பதவியில் விலகிய தோனி மொத்தமாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இது சரியான முடிவு என்று நான் கருதவில்லை. ஒருவேளை எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடரில் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்ல பலன் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஓய்வு பெற்று அருகில் இல்லாமல் இருப்பதே புதிய கேப்டனின் சூழ்நிலைகளை எளிதாக்கும். ஆனால் தற்போது எம்.எஸ். தோனி அருகில் இருப்பதால் புதிய கேப்டன் யாராக இருந்தாலும் வேலை கடினமாக இருக்கும்.

அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு தோனி சம்மதிக்கிறாரா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். ருதுராஜ் புதிய வாரிசாக வந்துள்ளார் என்பதை நாம் அறிவோம். அது போன்ற சூழ்நிலையில் அவர் தன்னுடைய சொந்த வழியில் முடிவுகளை எடுக்க வேண்டும். தோனி இல்லாமல் இருந்தால் மட்டுமே அவரால் முக்கிய முடிவுகளை இன்னும் எளிதாக எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story