'பாண்ட்யா இடத்தை நிரப்ப இன்ஸ்விங்கர் பந்துகளை வீசி அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய விராட் கோலி இருக்கிறார்'-ராகுல் டிராவிட்
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை என்று வரிசையாக போட்டு தாக்கிய இந்தியா முதல் அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் முக்கியமான நாக் அவுட் சுற்று நெருங்கியுள்ள இந்த சமயத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்ட்யா காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய அவர் உலக அளவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார்.
அப்படிப்பட்ட அவர் காயத்தால் வெளியேறியுள்ளதால் தற்போது இந்தியா 5 பவுலர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாண்ட்யா இடத்தை நிரப்ப இன்ஸ்விங்கர் பந்துகளை வீசி அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய விராட் கோலி இருக்கிறார் என வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.. குறிப்பாக பாண்ட்யா காயமடைந்து வெளியேறிய வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அவருடைய எஞ்சிய ஓவரை விராட் கோலி வீசி முடித்ததாக தெரிவிக்கும் டிராவிட் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு;-
"ஆம் தற்போது எங்களிடம் தரமான 6வது பவுலர் இல்லை. ஆனால் எங்களிடம் இன்ஸ்விங்கர் பந்துகளை வீசி அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய விராட் கோலி இருக்கிறார். அவரை ஓரிரு ஓவர்களுக்கு நாங்கள் பயன்படுத்தலாம். கடந்த ஆட்டத்தில் கூட ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு கேட்டுக் கொண்டதால் அவர் பந்து வீசுவதற்கு தயாராக இருந்தார்'' என்று கூறினார்.