நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி..!!


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி..!!
x

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

மவுன்ட் மாங்கானு,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி 306 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 19 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராட் 7 ரன்னிலும், ஆலி போப் 49 ரன்னிலும் நீல் வாக்னெர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹாரி புரூக் 54 ரன்னிலும், ஜோ ரூட் 57 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 31 ரன்னிலும், பென் போக்ஸ் 51 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 73.5 ஓவர்களில் 374 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னெர், மிட்செல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டும், நீல் வாக்னெர், ஸ்காட் குக்கலைன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பென் ஸ்டோக்ஸ் சாதனை

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்து இருந்த நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லத்தை (107 சிக்சர், 101 டெஸ்டில்) பின்னுக்கு தள்ளிய பென் ஸ்டோக்ஸ் (109 சிக்சர், 90 டெஸ்ட்) முதலிடத்தை தனதாக்கினார்.

இதனை அடுத்து 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணி 28 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டிவான் கான்வே 2 ரன்னிலும், கேன் வில்லியம்சன் ரன் எதுவும் எடுக்காமலும், டாம் லாதம் 15 ரன்னிலும், ஹென்றி நிகோல்ஸ் 7 ரன்னிலும், டாம் பிளன்டெல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து பரிதவிக்கிறது. டேரில் மிட்செல் 13 ரன்னுடனும், மிட்செல் பிரேஸ்வெல் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வெற்றியை நோக்கி இங்கிலாந்து

2-வது இன்னிங்சில் நியூசிலாந்து தொடக்க வீரர் டிவான் கான்வேயை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் போல்டு செய்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இணை (1,002 விக்கெட்டுகள்) என்ற புதிய சாதனையை படைத்தனர். இதற்கு முன்பு இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், வார்னே கூட்டணி 1,001 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. நியூசிலாந்து அணி வெற்றி பெற மேலும் 331 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளது.


Next Story