ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் நமக்கு கடினமாக இருந்திருக்கும் - குல்தீப் யாதவ்


ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் நமக்கு கடினமாக இருந்திருக்கும் - குல்தீப் யாதவ்
x

ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் அது நமது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்திருக்கும் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்னில் அடங்கியது. ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் கூட்டாக 6 விக்கெட்டுகளை சாய்த்தனர். அத்துடன் அவர்களது பந்து வீச்சில் 101 பந்துகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்னே எடுக்கவில்லை.

இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறுகையில், 'இந்த ஆடுகளத்தில் பந்து மெதுவாக சுழன்று திரும்பியதாக நினைக்கவில்லை. ஆனால் எனது பந்து வீச்சில் வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்தது. மேக்ஸ்வெல் அவுட்டை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும். எனவே பந்தை சுழல வைப்பதுடன், வேகமாகவும் வீச வேண்டியது மிகவும் முக்கியம்.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் போட்டிகளில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதை பார்க்கிறோம். ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் அது நமது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.' என்றார்.


Next Story