வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
x

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 47.2 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

மிர்புர்,

3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசம் சென்றுள்ளது. இதில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக மிர்புரில் நேற்று நடந்தது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 47.2 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 58 ரன்னும், மக்முதுல்லா 31 ரன்னும், கேப்டன் தமிம் இக்பால் 23 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், மொயீன் அலி, அடில் ரஷித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 65 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை பொறுப்புடன் ஆடிய டேவிட் மலான் வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். அந்த அணி 161 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசி வரை நின்று போராடிய டேவிவ் மலான் பவுண்டரி விளாசி இலக்கை கடக்க வைத்தார்.

இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 4-வது சதத்தை எட்டிய டேவிட் மலான் 114 ரன்களுடனும் (145 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), அடில் ரஷித் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story