உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் பாண்ட்யா ஆடுவது சந்தேகம்..? - வெளியான புதிய தகவல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.
லக்னோ,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதுவரை 5 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. இந்த ஆட்டம் லக்னோவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
வங்காளதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது காயமடைந்த பாண்ட்யா நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் நடைபெறும் லக்னோ மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் என்பதால் அந்த ஆட்டத்தில் ஷமி அல்லது சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அஷ்வின் விளையாட அதிகம் வாய்ப்பு உள்ளது.