தற்போது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான் - சுப்மன் கில் பேட்டி
சுப்மன் கில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மும்பை,
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
24 வயதான சுப்மன் கில் கடந்த 2019-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் சச்சின், விராட் கோலி போன்று இந்திய அணியின் அடுத்த தலைமுறை நட்சத்திர வீரராக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சுப்மன் கில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தற்போது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலிதான். அவரையே என்னுடைய முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளேன். என்னுடைய சிறுவயதில் நான் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்தேன். தற்போது விராட் கோலியின் ஆட்டத்தால் அதிகளவு ஈர்க்கப்பட்டுள்ளேன். அவரைப் போன்றே தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் முயற்சி செய்து வருகிறேன்.
நான் என்னுடைய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டிலேயே 7 என்கிற எண்ணை எடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது அந்த நம்பர் எனக்கு கிடைக்காததால் அதற்கு கூடவே மற்றொரு ஏழை சேர்த்துக்கொண்டு 77 என்ற நம்பரை எடுத்துக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.