தோனியை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்தது எப்படி? மனம் திறந்த சச்சின்


தோனியை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்தது எப்படி? மனம் திறந்த சச்சின்
x

image courtesy:AFP

2007-ம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்குமாறு அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவர் தம்மைக் கேட்டுக்கொண்டதாக சச்சின் கூறியுள்ளார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ். தோனி விலகினார். இவரது விலகலை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 முதல் சி.எஸ்.கே. அணியை தலைமை தாங்கி வந்த அவர் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், 5 ஐ.பி.எல். கோப்பைகளையும் வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

அதற்கு முன்பாகவே 2007-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பில் தைரியமாக செயல்பட்ட அவர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அப்படியே 2010-ம் ஆண்டு தோனி தலைமையில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்த இந்தியா சொந்த மண்ணில் நடந்த 2011 உலகக்கோப்பையை 28 வருடங்கள் கழித்து முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. அதன் பின் 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற தோனி உலகிலேயே 3 விதமான ஐ.சி.சி. வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார்.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்குமாறு அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவார் தம்மைக் கேட்டுக்கொண்டதாக சச்சின் கூறியுள்ளார். ஆனால் அதற்கு தோனிதான் சரியானவர் என்று தாம் பரிந்துரைத்ததாக தெரிவிக்கும் சச்சின் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"உண்மையில் 2007-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவர் இந்தியாவை என்னை தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது என்னுடைய உடல் மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக கணுக்காலில் காயமும் தோள்பட்டையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்த நான் கேப்டனாக நம்முடைய அணியை வழி நடத்துவது சரியல்ல என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தோனியை பற்றிய என்னுடைய அப்சர்வேஷன் நன்றாக இருந்தது.

ஏனெனில் நான் ஸ்லீப் பகுதியில் பீல்டிங் செய்வேன். அப்போது பலமுறை அவருடன் விளையாட்டை பற்றி உரையாடினேன். அந்த நேரங்களில் நான் அவரிடம் "இது போன்ற தருணத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்" என்று கேட்பேன். அவருடைய பதில்கள் சமநிலையில் இருந்தன. அவர் மிகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் அழுத்தமான தருணங்களில் விழிப்புணர்வு கொண்டவராகவும் இருந்தார்" என்று கூறினார்.


Next Story