விராட் கோலி உலகக்கோப்பையை வெல்லாதது என்னால் ஜீரணிக்க முடியவில்லை - ஹர்பஜன் சிங்


விராட் கோலி உலகக்கோப்பையை வெல்லாதது என்னால் ஜீரணிக்க முடியவில்லை - ஹர்பஜன் சிங்
x

விராட் கோலி ’சிக்கூ’ என்ற பட்டப்பெயருடன் இளம் வீரராக இருந்தபோது மட்டுமே உலகக்கோப்பையை வென்றதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர்.

ஆனால் அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்குத்தான் பாதிப்பை கொடுக்கும் என்று ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி சிக்கூ என்ற பட்டப்பெயருடன் இளம் வீரராக இருந்தபோது மட்டுமே உலகக்கோப்பையை வென்றதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக உருவெடுத்து 'கிங்' கோலியாக மாறிய பின் இன்னும் அவர் ஒரு ஐ.சி.சி. கோப்பையை கூட வெல்ல முடியாததை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். எனவே சமீபத்திய ஐ.சி.சி. தொடர்களில் நெருங்கி வந்தும் சாம்பியன் பட்டத்தை முத்தமிடாத விராட் கோலி 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடி இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஹர்பஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விரைவில் ஐ.பி.எல். வருகிறது. அதைத் தொடர்ந்து உலகக்கோப்பை நடைபெறுகிறது. அதில் விராட் கோலி தன்னுடைய பேட்டால் முன்பை விட சத்தமாக பதிலடி கொடுப்பார். அவர் விராட் கோலியாக இருந்தபோது உலகக்கோப்பையை வெல்லவில்லை. 'சீக்கூ'வாக இருந்தபோது வென்றார். இளம் வீரராக முதல் முயற்சியிலேயே அவர் உலகக்கோப்பையை வென்றது வேடிக்கையானது.

ஆனால் அங்கிருந்து மிகப்பெரிய வீரராக உருவெடுத்த விராட் கோலி உலகக்கோப்பையை வெல்லாத வீரராகவே இருக்கிறார். 2015, 2019 ஆகிய வருடங்களை தொடர்ந்து 2023-ல் அவர் விளையாடினார். ஆனால் கோப்பை நாட்டுக்கு வரவில்லை. எனவே அதை நினைத்து அவரும் சற்று புலம்பலாம். விராட் கோலி போன்ற வீரர் உலகக்கோப்பையை வெல்லாதது என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

எத்தனை சாதனை படைத்தாலும் ரன்கள் அடித்தாலும் அவரிடம் வெற்றிக்கான பசி தீராது என்பதை நான் அறிவேன். இருப்பினும் ஒவ்வொரு வீரரின் மிகப்பெரிய லட்சியம் உலகக்கோப்பையை வெல்வதாகும். சாதனைகள் உங்களுடன் கடைசி வரை இருக்கும். ஆனால் மக்கள் சாதனைகளை நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் நீங்கள் எத்தனை கோப்பைகளை வென்றீர்கள் என்பதை மட்டுமே மறக்காமல் வைத்திருப்பார்கள்" என்று கூறினார்.


Next Story