கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை - பாபர் ஆசம்
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
அகமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாபர் ஆசம் கூறுகையில்,
கடந்த காலங்களில் நடந்தவற்றில் கவனம் செலுத்துவதில் எந்த பயனுமில்லை. மாறாக அடுத்ததாக என்ன நடக்கும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாக எந்த சாதனையும் உடைக்கப்படுவதற்காகவே படைக்கப்படுகிறது. எனவே கடவுள் நாடினால் நாளை எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுப்போம்.
அப்போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் வெளிப்படுத்திய வெற்றி செயல்பாடுகளை இப்போட்டியிலும் எங்களுடைய அணி வெளிப்படுத்தும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. ஆனாலும் நாங்கள் 2017 (சாம்பியன்ஸ் டிராபி), 2021இல் (டி20 உலகக் கோப்பையில்) தொடர் தோல்விகளை ஏற்கனவே நிறுத்தியுள்ளோம். அதை செய்யாமல் இருந்த நாங்கள் செய்து காட்டினோம். அதே போல இம்முறையும் எங்களால் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.