ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: கோலியை முந்திய ஜெய்ஸ்வால், ரோகித் .... அஸ்வின் மீண்டும் முதலிடம்


ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: கோலியை முந்திய ஜெய்ஸ்வால், ரோகித் .... அஸ்வின் மீண்டும் முதலிடம்
x

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

துபாய்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து ஐ.சி.சி. வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வில்லியம்சன் (நியூசிலாந்து) முதலிடத்திலும், ஜோ ரூட் (இங்கிலாந்து) 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சுமித் 2 இடங்கள் சரிந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிடுகிடுவென முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை தாண்டி 6-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலும் 2 இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) 2-வது இடத்தில் உள்ளார். இந்த தர வரிசையில் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.Next Story