இவருக்காக டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் - சேவாக்


இவருக்காக டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் - சேவாக்
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறி அசத்தியுள்ளது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி ராகுல் டிராவிட்டுக்காக வெல்ல வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த உலகக் கோப்பையில் இதைவிட சிறந்த பொழுதுபோக்கான ஆட்டத்தை நான் பார்க்கவில்லை. முதல் ஆறு ஓவர்கள் மட்டுமே ரோகித் சர்மா கிரீசில் இருப்பார் என்று நான் நினைத்தேன்.

ஆனால் பவர் பிளேவுக்கு பிறகும் அவர் விளையாடினார். மேலும் அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் நம் இதயங்களை மகிழ்ச்சியடைய வைத்தார். வேறென்ன செய்ய வேண்டும். 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை சச்சினுக்காக நாம் விளையாடினோம். இந்த முறை ராகுல் டிராவிட்டுக்காக டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.

அவர் இதுவரையில் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்ததில்லை. இந்த முறை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஒரு பயிற்சியாளராக அவர் உலகக் கோப்பையை வென்ற அணியில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story