இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது


இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது
x

இந்தியா- இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக இன்று அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள். கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார். மற்றபடி முன்னணி வீரர்கள் அனைவரும் கைகோர்ப்பதால் இந்திய அணி வலுவடைந்துள்ளது.

இஷான் கிஷனுக்கு இடமில்லை

இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. அதற்கு முன்பாக ஆசிய கோப்பை போட்டியை தவிர்த்து இந்தியா 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்குள் சரியான கலவையில் இந்திய அணியை அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். அதற்கான முதற்படிக்கட்டாக இந்த தொடர் அமையும். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் என்ற நட்சத்திர வீரர்களின் அணிவகுப்பால் பேட்டிங்கில் பலம் பொருந்தியதாக திகழ்கிறது. ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில் களம் இறங்குகிறார். துரதிர்ஷ்டவசமாக இஷான் கிஷனுக்கு இடம் வழங்க முடியவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 210 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த போதிலும் இஷான் கிஷன் வெளியே உட்கார வேண்டிய நிலைமையில் உள்ளார்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப், முகமது சிராஜ், முகமது ஷமி, அக்ஷர் பட்டேல், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மிரட்டுவார்கள். 20 ஓவர் போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியிலும் வாணவேடிக்கை காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இலங்கை எப்படி?

20 ஓவர் கிரிக்கெட் தொடரை இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா நல்ல நிலையில் உள்ளனர். மிடில் வரிசை பலவீனமாக உள்ள நிலையில் ஆல்-ரவுண்டர்கள் கேப்டன் ஷனகா, ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். ஒருங்கிணைந்து விளையாடினால் கடும் சவால் அளிக்கலாம். இந்திய மண்ணில் இதுவரை 10 நேரடி ஒரு நாள் தொடர்களில் ஆடியுள்ள இலங்கை அணி ஒன்றில் கூட தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டுமா அல்லது மறுபடியும் இந்தியாவிடம் சரண் அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இலங்கை கேப்டன் ஷனகா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'அண்மை காலத்தில் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து வேறு எந்த அணியும் தொடரை வென்றதில்லை. நாங்கள் கூட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் கடும் போராட்டம் அளித்தோம். ஆனால் அவர்கள் வலுவாக மீண்டு வந்து விட்டனர். எனவே நாங்கள் சவாலான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் இந்த தொடர் இலங்கை வீரர்கள் அனைவருக்கும் முக்கியமானதாகும். போட்டியை சிறப்பாக தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். இங்குள்ள சூழலுக்கு ஏற்ப நன்றாக தயாராகி உள்ளோம். இது அதிக ரன்கள் எடுக்கப்படும் போட்டியாக இருக்கும் என்று தோன்றுகிறது.' என்றார்.

இதுவரை...

இவ்விருஅணிகளும் இதுவரை 162 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 93-ல் இந்தியாவும், 57-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டை ஆனது. 11 ஆட்டங்களில் முடிவு இல்லை.

ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இங்கு ஒரு ஆட்டம் மட்டுமே நடந்துள்ளது. 2018-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அந்த ஒரு நாள் போட்டியில் 323 ரன்கள் இலக்கை இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சதத்தோடு 42.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது நினைவு கூரத்தக்கது.

சாதனையை நோக்கி கோலி...

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிராக இதுவரை 8 சதம், 11 அரைசதம் உள்பட 2,220 ரன்கள் (47 ஆட்டம்) குவித்துள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் அடித்தால் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப்சிங்.

இலங்கை: குசல் மென்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்கா அல்லது லாஹிரு குமாரா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story