உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் ஆடாததே தோல்விக்கு காரணம் - வாசிம் அக்ரம்


உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் ஆடாததே தோல்விக்கு காரணம் - வாசிம் அக்ரம்
x

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசுகையில், 'உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் ஆடாததே தோல்விக்கு காரணமாகும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன் சேர்த்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரி இருந்து இருக்கும். ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறகு நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாததால் லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று ஆடும் நோக்கில் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்து இருப்பார் என்று நினைக்கிறேன். ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்து இருந்தால் லோகேஷ் ராகுல் ரிஸ்க் எடுத்து அதிரடியாக விளையாடி இருப்பார். அவர் அந்த சூழ்நிலையில் ரிஸ்க் எடுத்து விளையாடி விரைவில் ஆட்டமிழந்து இருந்தாலும் விமர்சனம் எழுந்திருக்கும்' என்று கூறினார்.


Next Story