ஐ.பி.எல். கிரிக்கெட்: இந்த சீசனில் 6 புதிய கேப்டன்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்:  இந்த சீசனில் 6 புதிய கேப்டன்கள்
x

image courtesy: twitter/@IPL

தினத்தந்தி 22 March 2024 3:29 AM GMT (Updated: 22 March 2024 6:10 AM GMT)

17-வது ஐ.பி.எல். சீசனில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுக்கட்டுகின்றன.

முன்னதாக இந்த சீசனில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சீசனில் 6 புதிய கேப்டன்கள் அணிகளை வழிநடத்த உள்ளனர். சென்னை அணியை தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துகிறார். மார்க்ரம் தலைமையில் கடந்த ஆண்டு ஐதராபாத் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த முறை ரூ.20. 5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக்கி இருக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பைக்கு தாவியதால் குஜராத் அணியின் கேப்டன் பதவி இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்ப்புக்கு மத்தியில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் அரியணையில் அமர்த்தி இருக்கிறார்கள்.

ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார். இப்போது ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்து டெல்லி அணிக்கு திரும்பியிருப்பதால் அவரே கேப்டனாக பணியாற்றுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சென்ற ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதுகு வலி காயத்தால் ஒதுங்கியதால் நிதிஷ் ராணா கேப்டனாக இருந்தார். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணியுடன் இணைந்திருப்பதுடன் கேப்டன் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.


Next Story