ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
x

இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடியது. குஜராத் அணியில் பேட்டிங்கில் விருத்திமான் சஹா, கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், விஜய் சங்கரும், பந்து வீச்சில் மொகித் ஷர்மா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. அடுத்த ஆட்டங்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடமும், 21 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

இதில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் (70 ரன்), பேர்ஸ்டோ (42 ரன்) சூப்பர் தொடக்கம் தந்தாலும், அதன் பிறகு வந்த பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் ஆகியோர் சொதப்பியதால் அணி இலக்கை எட்ட முடியாத நிலையை ஏற்படுத்தியது. எனவே இன்றைய ஆட்டத்தில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா, ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.


Next Story