ஐபிஎல் தொடர்; தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் விளையாடலாம் - சிஎஸ்கே வீரர்


ஐபிஎல் தொடர்; தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் விளையாடலாம் - சிஎஸ்கே வீரர்
x

Image Courtesy: @ChennaiIPL

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

மும்பை,

16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். கடந்த சீசன் கோப்பையை வென்ற தோனி, உடல்நிலை ஒத்துழைத்தால் அடுத்தாண்டும் சென்னை அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், இன்னும் 2 அல்லது 3 சீசன்களில் அவர் விளையாடலாம் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் தோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.

தோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.

தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம்.களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம்.

அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story