இந்த பலம் போதுமா உங்களுக்கு? ஆஸ்திரேலிய முன்னாள் வீரரின் கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பதிலடி


இந்த பலம் போதுமா உங்களுக்கு? ஆஸ்திரேலிய முன்னாள் வீரரின் கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பதிலடி
x

image courtesy; twitter/@ICC

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

பிரிஸ்பேன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்தது.

இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் வெஸ்ட் இண்டீசை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றி பெற்ற பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரைக் பிராத்வெயிட் அளித்த பேட்டியில், ' நாங்கள் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றதை நான் விரும்புகிறேன். நாங்கள் இங்கு வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை இது எனக்கு ஆரம்பம். இதனை அப்படியே தொடர விரும்புகிறேன். இந்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு உத்வேகம் அளித்த இரண்டு வார்த்தைகள் எங்களிடம் இருந்தன. நாங்கள் பரிதாபமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார்.

அதுவே எங்கள் உத்வேகமாக இருந்தது. நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினோம். நான் அவரிடம் கேட்க வேண்டும், இந்த பலம் உங்களுக்கு போதுமானதா?. எங்களால் முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினேன். அதை செய்து காட்டினேன். ஷமர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் எதிர்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான செயல்களைச் செய்வார் என்று எனக்கு தெரியும். அவரது நம்பிக்கை நம்பமுடியாதது. நாங்கள் கடைசி விக்கெட்டை வீழ்த்தும் வரை பந்துவீச்சை நிறுத்த மாட்டேன் என்று அவர் என்னிடம் கூறினார். அதனை செய்தும் காட்டினார்' என்று கூறினார்.


Next Story