மொத்த கெரியரில் நான் செய்ததை ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் முறியடித்து விட்டார் - குக் பாராட்டு


மொத்த கெரியரில் நான் செய்ததை ஜெய்ஸ்வால் ஒரு  இன்னிங்சில் முறியடித்து விட்டார் - குக் பாராட்டு
x

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 12 சிக்சர்களுடன் 214 ரன்கள் குவித்தார்.

லண்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு 3 போட்டிகளில் 545 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து வருகிறார். குறிப்பாக 2-வது போட்டியில் 209 ரன்கள் குவித்த அவர் 3-வது போட்டியில் 214 ரன்கள் குவித்தார்.

அதிலும் குறிப்பாக மூன்றாவது போட்டியின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் இந்த இன்னிங்சில் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.

இந்நிலையில் தம்முடைய மொத்த கெரியரில் அடித்த சிக்சர்களை விட ஜெய்ஸ்வால் வெறும் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

"என்னுடைய மொத்த கெரியரில் நான் அடித்ததை விட ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் என்னுடைய கெரியர் முழுவதும் நான் செய்ததை ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சிலேயே முறியடித்து விட்டார் " என்று கூறினார்.

முன்னதாக தன்னுடைய கெரியரில் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12472 ரன்கள் குவித்த இங்கிலாந்து முன்னாள் வீரரான அலெஸ்டர் குக் தன்னுடைய கேரியரில் வெறும் 11 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் 12 சிக்சர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story