ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
x

image courtesy; twitter/ @ACCMedia1

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக பஷீர் அகமது மற்றும் பரிடூன் தாவூத்சாய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாமில் ஹுசைன் மற்றும் ஷாஜாய்ப் கான் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின் பாகிஸ்தான் அணியில் முகமது ரியாசுல்லா தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48 ஓவர்கள் மட்டுமே விளையாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாமில் ஹுசைன் 75 ரன்களும், ஷாஜாய்ப் கான் 79 ரன்களும் மற்றும் முகமது ரியாசுல்லா 73 ரன்களும் அடித்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக பஷீர் அகமது மற்றும் பரிடூன் தாவூத்சாய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Next Story