ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் 'திரில்' வெற்றி


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி
x

image courtesy; twitter/ @ICC

இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் நாதன் எட்வர்ட்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்செப்ஸ்ட்ரூம்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 46.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 192 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹம்சா ஷேக் 54 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக நாதன் எட்வர்ட்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டன் பொறுப்புடன் விளையாடி வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். அவருக்கு நாதன் எட்வர்ட்ஸ் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

முடிவில் 41 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீபன் பாஸ்கல் 58 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தசீம் அலி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் நாதன் எட்வர்ட்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Next Story