டி20 உலகக்கோப்பையில் கோலியை தேர்வு செய்யக்கூடாது... ஏனெனில் அவர் அணியில் இருப்பது... - மேக்ஸ்வெல்


டி20 உலகக்கோப்பையில் கோலியை தேர்வு செய்யக்கூடாது... ஏனெனில் அவர் அணியில் இருப்பது...  - மேக்ஸ்வெல்
x

image courtesy:PTI

தினத்தந்தி 11 April 2024 2:33 PM GMT (Updated: 11 April 2024 3:29 PM GMT)

விராட் கோலியை 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா தேர்வு செய்யக்கூடாது என்று மேக்ஸ்வெல் ஜாலியாக தெரிவித்துள்ளார்.

மும்பை,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர். அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியை 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தேர்வு செய்யக்கூடாது வீரர் என்று ஐ.பி.எல். தொடரில் சக அணி வீரரும், ஆஸ்திரேலிய நட்சத்திர ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் ஜாலியாக தெரிவித்துள்ளார். குறிப்பாக 2016 டி20 உலகக்கோப்பையில் மொகாலியில் நடைபெற்ற அரையிறுதியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்ததை மேக்ஸ்வெல் நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே விராட் கோலியை போன்ற வீரர் இந்திய அணியில் இருப்பது தங்களைப் போன்ற எதிரணிகளுக்கு ஆபத்து என்று பாராட்டும் மேக்ஸ்வெல் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"இதுவரை நான் எதிராக விளையாடிய வீரர்களில் விராட் கோலிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர். 2016 டி20 உலகக்கோப்பையில் மொகாலியில் எங்களுக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் மிகவும் சிறந்தது. வெற்றி பெறுவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அவரது விழிப்புணர்வு அபாரமானது. எனவே இந்தியா அவரை இம்முறை தேர்ந்தெடுக்காது என்று நம்புகிறேன்.

ஏனெனில் அவருக்கு எதிராக நாங்கள் விளையாடாமல் இருப்பது மிகவும் நல்லது. இந்தியாவில் இருக்கும் 1.5 பில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிரிக்கெட்டார்கள். அதனால் இந்த ஐ.பி.எல். தொடரில் இந்தியாவில் எவ்வளவு டி20 வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பாருங்கள். மிகவும் திறமையான அந்த வீரர்களிடம் சாதிப்பதற்கான திறமை இருக்கிறது" என்று கூறினார்.


Next Story