லிவிங்ஸ்டன் அபாரம்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி


லிவிங்ஸ்டன் அபாரம்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி
x

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

சவுத்தாம்ப்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது. அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 34 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டோன் மட்டும் அதிரடியாக ஆடி 95 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கர்ரன் 42 ரன், மொயீன் அலி 33 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 57 ரன் சேர்த்தார். வில் யங் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், நியூசிலாந்து 26.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. லிவிங்ஸ்டோனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.


Next Story