மைதானத்தில் மோதல்: விராட் கோலி - கம்பீருக்கு 100% அபராதம்


மைதானத்தில் மோதல்: விராட் கோலி - கம்பீருக்கு 100% அபராதம்
x
தினத்தந்தி 2 May 2023 7:55 AM IST (Updated: 2 May 2023 10:07 AM IST)
t-max-icont-min-icon

மைதானத்தில் விராட் கோலியும், கவுதம் கம்பீரும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லக்னோ,

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி - கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், லக்னோ - பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகவும் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் 2 குற்றங்களை ஒப்புக்கொண்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதைபோல விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story